தலச்சிறப்பு |
ஒருசமயம் நாகம் ஒன்று செய்த தவறால் ஏற்பட்ட சாபத்தால் ஆதிசேஷன் தலைமையில் நாகங்களான வாசுகி, கார்கோடகன், தஷகன், அனந்தன், சங்க பாலன், குலிகன், பத்மன், மகா பத்மன் ஆகியோர் சிவபெருமானை வணங்கினர். சிவபெருமானும் கருணை கொண்டு, "திரும்பாம்புரம் தலத்திற்கு சிவராத்திரி அன்று சென்று வழிபட்டால் சாப நிவர்த்தி கிடைக்கும்" என்று அருள் புரிந்தார். நாகங்களும் அவ்வாறு சென்று வழிபட்டு சாப நிவர்த்தி அடைந்தனர். அதனால் இத்தலம் 'திருப்பாம்புரம்' என்று பெயர் பெற்றது.
இத்தலத்து மூலவர் 'சேஷபுரீஸ்வரர்', 'பாம்புரநாதர்' என்னும் திருநாமங்களுடன், சதுர வடிவ ஆவுடையுடன், மிகச் சிறிய லிங்க மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். அம்பிகை 'வண்டார் பூங்குழலியம்மை' என்னும் திருநாமத்துடன் சிறிய வடிவினளாக காட்சியளிக்கின்றாள்.
இங்கு கோஷ்டத்தில் எந்த ஒரு மூர்த்தியும் இல்லை. பிரகாரத்தில்தான் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. இராஜ கணபதி, வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்யர், வன்னியீஸ்வரர், நால்வர், சனீஸ்வரர், பைரவர் சன்னதிகளும் உள்ளன. மேலும் பிரகாரத்தில் சீர்காழியில் உள்ளது போலவே சற்று உயரமான இடத்தில் மலையீஸ்வரர், சட்டநாதர் சன்னதிகள் உள்ளன. மகாமண்டபத்தில் பஞ்சமூர்த்திகள், நடராஜர் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகள் தரிசனம் தருகின்றனர்.
ஆதிசேஷனுக்கு தனி சன்னதியும், உற்சவ மூர்த்தியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இராகு, கேது இருவரும் தனித்தனியாக இல்லாமல் ஒரே மூர்த்தமாகக் காட்சி தருகின்றனர்.
மகாசிவராத்திரியன்று நாகராஜனும் உள்ளிட்ட பாம்புகள் இரவில் முதல் காலத்தில் கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரன் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் இத்தலத்திலும், நான்காம் காலத்தில் நாகூர் நாகநாத சுவாமி கோயிலிலும் வழிபட்டதாக தலபுராணங்கள் கூறுகின்றன. அதனால் மகாசிவராத்திரி அன்று மூன்றாம் காலத்தில் ஆதிசேஷ உற்சவர் சுவாமி முன் எழுந்தருளிய பிறகு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவது விசேஷம்.
பிரம்மா, இந்திரன், அகத்திய முனிவர், சூரியன், சந்திரன் மற்றும் நாகங்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|